Wednesday, November 3, 2010

பெற்ற‌வ‌ள்

 சிறுக‌தை

விடிகாலை மார்க‌ழியில் போர்வையை, முகம் மட்டும் தெரியும்படி காதுகளை பொத்தி தூங்குவது மிகவும் சுகமானது. தூரத்தில் சிவகாமியம்மன் கோவிலில் ஒலிக்கப்படும் மந்திரம், பனியில் பெருமளவு கரைந்து காதுகளை வந்தடையும் போது தாலாட்டுவதை போலிருக்கும். அதிகாலை தூக்கம், தூக்கத்தின் சுகத்தை பூரணப்படுத்தும். ஆனால் அந்த‌ சுக‌ம், ஒளி ப‌ட்ட‌வுட‌ன் காணாம‌ல் போகும் இருள் போல‌. மனம் அதற்கு ஏங்கினாலும் காலம் விடுவதில்லை. சில நேரம் அம்மாக்க‌ள் விடுவதில்லை.


பட்டெனெ விழுந்த அடி குமாருக்கு தன்னை யாரோ எதிலிருந்தோ வெடுக்கென பிடுங்கப்பட்டவன் போல் கண நேரத்தில் உணர்ந்து, விருட்டென எழுந்து பார்த்தான். அவனுக்கு எரிச்சலும் கோபமும் இருந்தது தவிர 'நான்' உணர்வில்லை. கோபம் கொண்ட அகன்ற விழிகள் கொஞ்சம் பேந்த விழித்தன. விடிகாலை கருநீல இருட்டையும், முற்றத்து விளக்கில் வழிந்த ஒளியின் எச்சத்தையும் தாங்கியபடி ஈரத்தலை பின்னப்படாமல் சந்திரா நின்றிருந்தாள்.  முகம் முழுதும் மஞ்சள். பெரிய பொட்டு. முறைத்தபடி இருந்தாள். தன்னுணர்வும் தாய்யென்றுணர்வும் கொண்ட குமாருக்கு கோபம் பொசுக்கென்று ஓடிப்போனது.

"போ, போய் கெளம்பு, நைட்டெல்லாம் முழிச்சு படிச்சு கிழிச்சிட்டைல, தூங்க வேண்டியதுதே.." என்றாள்.

குமார் ஒன்றும் பேசாமல் எழுந்தான். கண் சொருகியது. பிரியமான அதிகாலை தூக்கம் அவனை பிரிய மனமில்லாமல் கண்வலிக்கச் சென்றது. குமார் குளித்து விட்டு வெள்ளை சட்டையும், நீல டவுசருமான சீறுடையை அணிந்து கொண்டு முற்றத்திற்க்கு வந்தான். இட்லி மற்றும் பொடியுடன் கூடிய தட்டு வைக்கப்பட்டிருந்தது. இட்லிக்கு வெறும் பொடி என்பதை குமாரால் ஜீரணிக்க முடியவில்லை ச‌ண்டையில்லாத‌ சினிமா போல‌. தற்சமயம் தான் எது கேட்டாலும் அடி விழும் என அறிந்து பேசாமல் சாப்பிட்டான். சந்திரா கிளம்பியிருந்தாள்.

"சீக்கிரம் தின்னிட்டு கிளம்பு" என்று சொல்லியபடி வந்தவள் நேராக கோகிலாவை போய் எழுப்பினாள். "ஏய் எந்திரிடி, எப்பிடி பிள்ளைகள பெத்து வச்சிருக்கேன் பாரு, பொம்பள பிள்ளன்னுதேன் பேரு, ஒரு ஒதவிக்கு ஆகுறதில்ல, ஏய் எந்திரிடி, மணிய எழுப்பி ஸ்கூலுக்கு கெளப்பி விடு, இட்டிலி இருக்கு, சாப்ட்டுட்டு டிபன் பாக்ஸுல போட்டு எடுத்துக்கங்க" என்றாள்.

கோகிலா விழிக்கத் திணறியபடி எழுந்து ஒரு சாய்த்து இரண்டு கைகளையும் பக்கவாட்டில் ஊன்றியபடி அமர்ந்தாள். சந்திராவுக்கு லேசாக பசித்தது. இருக்கும் படபடப்பில் அவளால் சாப்பிட முடியவில்லை. குமார் மெதுவாக சாப்பிட்டுக்கொண்டிருந்தான். "அள்ளி வாய்ல போட்டுட்டு கிளம்பு, ஸ்கூலு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடிப் போகனும்" என்று சிடுசிடுத்தாள். குமார் தலை நிமிர்ந்து பார்க்காமல் சாப்பிட்டு, தட்டை கொண்டுபோய் தண்ணித்தொட்டிக்கு அருகில் போட்டான், கைகளை கழுவிவிட்டு வாயை துடைத்தபடி வெளியே வந்தான். சந்திரா அவனை முறைத்தபடி பார்த்தாள். இவனுக்கு என்ன‌வென்று தெரியவில்லை. பட்டெனெ கன்னத்தில் அறை விழுந்தது "போ, போய் பைக்க‌ட்ட‌ எடுத்துட்டு வா, சினிமாக்க போற?, வெறுங்கையோட வர்றான்" என்றாள். மூக்கை விடைத்து முறைத்தபடி போய் பையை எடுத்து வந்தான். "இப்பிடி முறைக்கிறதுக்கு எப்போ எங்கிட்ட மூஞ்சிலயே சூடு வாங்கப்போறன்னு தெரில" என்றாள். இருவரும் நடந்தனர்.

சந்து திரும்பையில் வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த ஈஸ்வரி தலை நிமிர்ந்து இருவரையும் பார்த்தாள். "என்னாது, இன்னியாரத்துக்கே எங்க கெளம்பியாச்சு?" என்றாள். "இவன ஸ்கூல்ல கொண்டுபோய் விடறதுக்கு" என்ற சொல்லியபடி நிற்காமல் நடந்தாள் சந்திரா. அவர்கள் போவதையே சிறிது நேரம் பார்த்துவிட்டு "இந்தக்காவுக்கு மாசத்துக்கு இப்பிடியொரு வேல வச்சிர்றியான்" என முனங்கியபடி கோலம் தொடர்ந்தாள்.

பஸ் ஸ்டாண்ட் கொஞ்சம் தொலைவு. சந்திரா விறுவிறுவென நடந்தாள். அவள் வேகத்திற்க்கு குமாரால் ஈடு கொடுக்க முடியவில்லை. மேலும் பாழாய்போன பைக்கட்டு வேறு. சீலையம்பட்டி பஸ் ஸ்டாண்ட்டில் கூட்டம் அதிகமிருந்தது. முக்கால்வாசிப்பேர் பூ வியாபாரிகள். கிலோ கணக்கில் பூக்களை மூட்டையாக கட்டி அதில் நீர் விட்டு ஈரமாக்கி, தேவர் மற்றும் காமராஜர் சிலைகளின் பீடத்தை சுற்றி சாத்தி வைத்திருந்தனர். முல்லையும், கனகாம்பரம்பும் அதிகமிருந்தன. தேனிக்கும், மதுரைக்கும் ஏற்றுமதி.

கம்பத்திலிருந்து வந்த மதுரை செல்லும் பஸ்ஸில் கும்மரின் கைபற்றி அவனை ஏற்றிவிட்டு ச‌ந்திரா ஏறினாள். கிடைத்த இடங்களில் தாயும், மகனும் தள்ளி தள்ளி அமர்ந்தனர். குமாருக்கு ஜன்னலோர சீட் கிடைக்காதது எரிச்சலாய் வந்தது. சந்திரா, முன் பக்க கம்பியை தன் இருகைகளாலும் இறுக பற்றியபடி அமர்ந்திருக்கும் கிழவியின் அருகில் அமர்ந்தாள். வண்டியின் ஆட்டத்திற்கேற்ப கிழவியின் கிழிந்த காதும் தொங்கட்டானும் ஆடியது. வண்டி தேனியை நோக்கி வேகமெடுத்தது. ஐந்து ரூபாய் தாளை கொடுத்து, தேனிக்கு இரண்டு டிக்கெட்டுகளையும், மீதம் ஐம்பது காசையும் நடத்துனரிடம் பெற்றுக்கொண்டாள். கிழவியைத் தாண்டி ஜன்னல் வ‌ழியே குளிர் காற்று உட‌ம்பை குத்திய‌து.

வ‌ழியெங்கும் தென்னையும், வ‌ய‌லும், சிறு சிறு ஊர்க‌ளும் க‌ட‌ந்து செல்ல‌, வீரபாண்டியில் பஸ் நின்ற‌து, புதிதாய் வ‌ண்ண‌மிட‌ப‌ட்ட‌ குட்டையான‌ கௌமாரியம்மன் கோவில் கோபுரம் தெரிந்தது. செருப்பிலிருந்து காலை உருவிக்கொண்டு கோபுரத்தை வணங்கிக்கொண்டாள். பஸ் வீரபாண்டி பாலத்தை கடந்தது. பாலத்திலிருந்து, வைகை அணையை நோக்கி ஆடி அசைந்து நின்று நிதானித்து விருப்பமில்லாமல் செல்லும் கொஞ்சமான சுரபி நதி தெரிந்தது. பொதுவாய் இந்த‌ கால‌த்தில் ஆற்றில் த‌ண்ணீர் வேக‌மெடுக்கும், ஏனென்று தெரிய‌வில்லை என்று எண்ணிக்கொண்டாள். தேனி நெருங்க நெருங்க இருவருக்குமே படபடப்பாகியது. சந்திராவுக்கு அவர்கள் திரும்பவும் இவனை ப‌ள்ளியில் சேப்பார்க‌ளா, இல்லையா என பயமாயிருந்தது. போனமுறையே அவர்களின் காலில் விழாக்குறையாக கெஞ்சி இவனை சேர்த்துவிட்டு வரும்படி ஆனதை நினைவில் வந்து பயமுறுத்தியது. அதுவும் அந்த த‌லைமையாசிரிய‌ர் முகத்தை சுருக்கி தன்னையும் சேர்த்து, அங்கிருந்த மாணவர்கள் முன் திட்டியது இவளுக்கு பெரும் வேதனை. அவனிடம் என்ன பேசுவது என்று மனதிற்க்குள் வார்த்தைகளைச் சேர்த்தாள். எல்லாம் ஏற்கனவே அவனிடம் சொல்லிய வார்த்தைகளே மீண்டும் வரிசையாய் வந்து நின்றது. இந்த முறை தன்னிடம் நின்று கூட பேசமாட்டானோ என்று எண்ணினாள்.

குமார் மீது வந்த ஆத்திரத்திற்க்கு அளவில்லை. எவ்வளவோ அடித்தும் அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. விட்டால் திருப்பி அடக்க கை ஓங்குவான் போல.

ம்பதாவது படிக்குற மத்த பைய‌ங்ய எல்லா இவன‌ மாதிரியா பெரியமனுசத்தனமாய் நடக்குதுக? இவெ பேச்சும் நடவடிக்கையும் வயசுக்குத்தேமாறி கெடையாது என்று னினைத்துக்கொண்டாள். ச‌ந்திராவுக்கு புருச‌ன் மேலுள்ள‌ கோவ‌ம் ச‌மீப‌கால‌மாய் அதிக‌ரித்திருக்கிறது.

என்ன ஏதுன்னு அவராவது ஒரு வார்த்த கேக்குறாரா? எப்பயாச்சு ஊருக்கு வர வேண்டியது, சீட்டுப்பணம் எவ்வளவு இருக்குன்னு கேட்டு வாங்க வேண்டியது, அப்படியே மறுநாளே கெளம்பிர வேண்டியது, இவ என்ன செய்யிரா? எப்படி பிள்ளைகளுக்கு சோறு போடுறான்னு யோசிச்சு பாக்கது கெடையாது. மெட்ராசில தக்காளி ஏவாரின்னுதான் பேரு, எப்போ கேட்டாலும் நஸ்டம் நஸ்ட்டம்ங்க வேண்டியது. அப்படி நஸ்ட்டம்னா ஏன் அங்க இருக்கனும்? ஊரப்பாத்து வந்து வேண்டியதுதானன்னா, அத கேக்குறதில்ல. இங்க வந்து உனக்கு பூச போட்டுகிட்டு சும்மா க்காந்திருக்கவான்னு பேசுனா நல்லாவா இருக்கு காற்றில் அலைந்த‌ முந்தானையை எரிச்ச‌லுட‌ன் ப‌ற்றி தோளை சுற்றி போர்த்திக்கொண்டாள்.

"வந்தா முழுசா ரெண்டு நாள் இருக்குறதில்ல. அப்டியே இருந்தாலும் எதையாவாது குத்தம் சொல்லி எல்லாத்தயும் கண்டமேனிக்கு பேச வேண்டியது. பிள்ளைக அப்பா வர்றார்னா பயப்புடுதுக. இதில இவெ என்னத்தையாவது செஞ்சிட்டு வந்து நிக்கிறியா. கரெக்டா அவரு வரும்போது யாராவது ஒம்மகெ இப்பிடி செஞ்சுவிட்டயான்னு சொல்லிவிட்றாக. என்ன ஏதுன்னு கேக்காம போட்டு அடிச்சிட்டு, ஊருக்கு கெளம்பிர‌ வேண்டியது" என்று ம‌ன‌தில் ஆத்திர‌ப்ப‌ட்டுக் கொண்டாள்.

குமார் முன் சீட்டிலிருந்து ச‌ந்திராவை திரும்பி பார்த்துக்கொண்டான். ச‌ந்திரா அவ‌னை க‌டுக‌டுத்துப் பார்த்தாள். "அந்த அடி அடிச்சும் இவெ திருந்திறானா...அவரு அங்கிட்டு கிளம்பின ஒடனேயே, இவெ இங்கிட்டு ஆரம்பிச்சுடுறியா. அங்கிட்டு இங்கிட்டுன்னு ஆள்புடிச்சு தேனில பெரிய ஸ்கூல்ல சேத்துவிட்டதுக்கு, நா இப்படி கண்டவெங்கிட்ட எல்லாம் பேச்சு வாங்க வேண்டியிருக்கு, ஆஸ்ட்டல்ல அப்படி என்ன கொற இவனுக்கு? நல்லாத்தேன் சாப்பாடு போடுறாகலாம். நல்லா சாப்ட்டுட்டு படிக்கிற வேலைய தவிர இவனுக்கு என்ன இருக்கு? அதேன் சனிக்கிழம அரநாள் வெளிய விட்டுறாகல்ல. ஊர்ருக்கு வந்துட்டு, கடையில புரோட்டா வாங்கி குடுக்குறத சாப்டுட்டு ஆஸ்ட்டலுக்கு கிளம்ப வேண்டியதுதான? அத செய்யிது கிடையாது. கிளம்பி வேற எங்கியாவது சொந்தகாரங்க வீட்டுக்கு போய்ர வேண்டியது, ரெண்டு நாள் கழிச்சு அவுக வந்து, என்னமா புள்ளைய போட்டு அடிச்சுபோட்ட, நம்ம வீட்ல வந்துதே இருக்குன்னு சொல்றப்ப நமக்கு உசுரு போய்ருது.

சந்திராவுக்கு குமார் புகை பிடிப்பானோ என்று திடீரெனெ சந்தேகம் தோன்றியது. பின் இன்னும் அந்த அளவுக்கு இல்லை என்று சமாதானமானாள். "வீட்ல காசு கண்ல பட்டா போதும், தூக்கிட்டு போய்டுறியான், நா பொழைக்கிற‌ பொழ‌ப்புக்கு இவெ வேற‌" என்று நொந்துகொண்டாள்

தேனி பஸ் ஸ்டான்டுக்குள் பஸ் நுழைந்த்தும், பரபரப்புடன் குமாரை இழுத்துக்கொண்டு இறங்கி ஸ்கூலை நோக்கி வேகமாக நடந்தாள். மொத்தமாய் வந்து கூண்டடையும் வளர்ப்பு புறாக்கள் போல பிள்ளைகள் பள்ளிக்குள் ஒருவித படபடப்புடன் நுழைந்து கொண்டிருந்தனர்.

குமாருக்கு இப்பொழுது பயம் பற்றி வயிற்றை புரட்டுவதுபோல் இருந்தது. கண்ணீர் முட்டியது. போனமுறை அம்மா விட்டுச் சென்றபின் வார்டனும், ஒவ்வொரு பாடத்திற்க்கான வாத்தியார்களும் அடித்த அடி அவனை நாள் முழுதும் முகத்தை கோணலாக்கி, வாயை காதுவரை இழுத்து அழச்செய்தது. இரவில் படுத்ததும் தூங்கும்படியான அடி.

இப்படியே அம்மாவின் கைகளை உதறிவிட்டு ஒடிவிடலாமா என்று யோசித்தான். ஒடினால் எங்கு போவது? தேனியில் சொந்தகாரர்கள் வீடு எதேனும் இருக்கா? எதாவது கடையில் வேலைக்கு போலாமா? மதுரையில் புரோட்டா கடையில் வேலை செய்யும் பாண்டி அண்ணனிடம் போலாமா? தினம் சாப்பிட புரோட்டா கிடைக்குமே என்றெண்ணிய நேரத்தில் அவனை சந்திரா தலைமை ஆசிரியர் அறையின் வாசலில் நிறுத்தியிருந்தாள். அவன் அவளிடம் அழுகை வழிந்த குரலில் "யம்மா அடிப்பாங்கம்மா" என்றான். "அடி வாங்கி சாவு எனகென்ன, நானெல்லாம் அடிச்சா உனக்கு இப்பெல்லாம் ஒறைக்கிறதில்ல, என்றாள். குமார் அதிகம் சத்தமில்லால் கேவத்தொடங்கினான்.

வெள்ளை சட்டையும் கறுப்பு பேண்டும் வலுக்கை தலையும் கொண்ட தலைமை ஆசிரியர் அறையிலிருந்து வெளியே வந்தார். அவரின் தொப்பையை தாங்கிய பெல்ட் எந்த நேரத்திலும் அந்து விழப்போவதுபோலிருந்தது. படிகளின் இருபுறமும் அழகுக்கு செடித்தொட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன. செடியின் பின்னால் சந்திராவும் குமாரும் நின்றிருந்தனர். அவர் செடிகளையும், அவர்களையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்த்துவிட்டு நகர்ந்தார். சந்திரா முன்னகர்ந்து "சார்" என்றாள். பின்னாடி வந்த பியூன் "இரும்மா, ப்ரேயர் முடிஞ்சதும் வருவாரு" என்றபடி அவர் பின்னால் ஒரு பேப்பரை பவ்யமாய் தூக்கி பிடித்தவண்ணம் சென்றான். தலைமை ஆசிரியர் அறைக்கு பக்கத்திலேயே ஒரு மரங்களுடன் சிறுவெளி. சுமார் ஆயிரம் மாணவர்கள் பல வரிசைகளாய் அணிவகுத்திருந்தனர். குட்டையானவர்கள் தொடங்க, உயரமானவர்கள் வரிசையை முடித்தனர். அவர்களுக்கு பின்னும், பக்கவாட்டிலும் ஆசிரியர்கள்.

தலைமைசிரியர் அணிவகுப்புகளுக்கு முன் இருந்த சிறு மேடையில் ஏறினார். அவர் பின் ஒரு சதுரத்தூணில் கரைந்து போன பல வண்ண எச்சங்களுடன் நெஞ்சும் தலையும் மட்டும் கொண்ட காந்தி சிரித்தார். தலைமை ஆசிரியர் பக்கத்தில் மூன்று மாணவர்கள் நிமிர்ந்த தலையும், உறைந்த உடலுமாக நின்றிருந்தனர். அவர்கள் பக்கம் திரும்பி "ம்" என்றார். உடனே அவர்கள் "மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு" என்று இழுத்தனர். தொடக்கதில் தவறவிட்ட இரண்டாமவன் "சுந்தரமாவது நீறில்" இணைந்துகொண்டான். பாடல் நிறைவு பெற்றதும் முதலாமவன் "தலைமையாசிறியர் உரை" என்று கத்தினான்.

மெதுவாக மைக்கிர்க்கு அருகில் வந்தார். ப்யூன் வேகமாக வந்து அவரிடம் அந்த பேப்பரை கொடுத்துவிட்டு அவரின் வாயுயரத்திற்க்கு மைக்கின் உயரத்தை பொருத்திவிட்டு பின்னகர்ந்தான். தலைமையாசிரியர் பேப்பரையே அரை நிமிடம் பார்த்தார். பின் மெதுவாக அதை படித்து சட்டை பையில் வைத்துவிட்டு "அன்பு மாணாக்கர்களே" என்றார். மாணவக்கூட்டத்தின் நடுவே நின்றிருந்த மரங்களில் கட்டப்பட்ட ஸ்பீக்கர் "பீபீங்ங்ங்...." என்று கத்திவிட்டு நின்றது.

எரிச்சலான ஒரு பார்வையில் அனைவரையும் பார்த்துவிட்டு, ஒருவிதமான தீவிரத்தன்மை கொண்ட கட்டைக்குரலை, வலிந்து கொண்டு வந்து "முழுத்தேர்ச்சி கல்வியாண்டு ஆயிரத்து தொல்லாயிரத்து தொன்னூற்றி ஐந்து, தொன்னூற்றி ஆறு என்ற ஒரு இலக்கை நம் தமிழக கல்வித்துறை தலைவர் மா. வேதநாயகம் ஏற்படுத்தி, அதனை அனைத்துப்பள்ளிகளும் செயல்படுத்திக்காட்ட வேண்டும் என அறிவித்திருக்கிறார் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்".

கைகள் இரண்டையும் தன் கனமான தொப்பையின் மேலே, புத்தரின் தியான முத்திரை போல ஒன்றின் மேல் ஒன்றை வைத்துக்கொண்டு "அதன்படி நம் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்புகளிலும் "முழுத்தேர்ச்சி கல்வியாண்டு ஆயிரத்து தொல்லாயிரத்து தொன்னூற்றி ஐந்து, தொன்னூற்றி ஆறு" என்ற போஸ்ட்டர் ஒட்டப்பட்டது. ஆனால் கடந்த அரையாண்டு தேர்வுகளின் முடிவுகளை நான் ஆழ்ந்து நோக்கும் போது, தேர்வில் வெற்றி பெற்றோர் சதவீதம், காலாண்டு தேர்வை விட முப்பது சதவீதம் குறைந்திருக்கிறது" என்று நிறுத்தி அனைவரையும் வலமிருந்து இட‌மாக, அதிகம் தலை திருப்பாமல் பார்த்தார்.

தன் வலது கையை தொப்பையிலிருந்து எடுத்து உயர்த்தி "மாணவர்களே ஒவ்வொரு பள்ளியும் கடுமையாக உழைத்து இந்த வருடம் நூறு சதவிகித தேர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக அறிவிக்கப்பட்ட இலக்கை, நம் பள்ளியில் உள்ள சில விஷமிகள் அதனை திரித்து, 'எப்படி எழுதினாலும் பாஸ் போடுவார்கள் என்று உங்களிடையே தவறான செய்திகளை பரப்பியிருக்கிறார்கள் என்பதை அறிந்தேன். "ஏன்டா அறிவுகெட்ட‌ மூதி, இங்க‌ என்ன‌ ஒப்பாரிய‌ வைக்கிறேன், வேற‌ எங்கிட்டோ திரும்பி வேடிக்க‌ பாக்குற‌, நீயெல்லாம் ப‌டிச்சு, பாஸ் ப‌ண்ணி கிழிச்ச‌ மாதிரித்தேன் என்று முன்வ‌ரிசை குட்டை மாண‌வ‌னை எரிந்துவிட்டு, "அதனை நம்ப வேண்டாம். நீங்கள் நன்றாய் எழுதினால் பாஸ், இல்லையென்றால் பெயில்தான் என்பதை நினைவில் கொள்ளவும்" என்று கூறிவிட்டு விறைத்த மூன்று மாணவர்களைப் பார்த்தார். அவர்கள் "நீராருங் கடலுடுத்த நிலமடந்தை என தொடங்க, பள்ளியே அவர்களுடன் இணைந்து கொண்டது.

தலைமையாசிரியர் தன் அறையின் உள்ளே செல்லும் போதும் சந்திரா "சார்" என்றாள். அது அவருக்கு கேட்க்கவே இல்லை. குமாரின் கணக்கு வாத்தியார் அவர்கள் நிற்கும் இடம் கடந்து அறையினுள் நுழையும் போது குமாரை பார்த்தவாறு சென்றார். குமாருக்கு நடுங்கிப்போனான். போனமுறை அவனை இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து அடித்தவர் அவர். அவ்வ‌ப்போது ப்யூன் டீயும், வடையும், பதிவெடுகளையும் கொண்டு சென்றபடி இருந்தான். ஒரு மணி நேரம் சந்திரா குமாருடன் வெளியே நின்றாள். ப்யூன் இந்த முறை வெளியே வரும்போது சந்திரா "எப்பங்க சார பாக்குது?" என்றாள். "அவருக்கு வேற வேலையில்லையா? நில்லுமா, கூப்டுவாரு" என்று ப்யூன் நகர்ந்தான். பசி சந்திராவை புரட்டியது. வாய் மிகவும் கசந்து ஒருவித நாற்றம் ஏற்படுத்தியது. உட்கார்ந்தாள் நன்றாய் இருக்கும் என்றாலும் அமரும்படியான தோது அவ்விடத்தில் இல்லை. குமார் தன் பையை கீழே வைத்துவிட்டு சுவற்றில் சாய்ந்து நின்றான். சந்திரா குமாரிடம் "எங்கடா தண்ணி இருக்கும்" என்றாள். குமார் பேசாது தண்ணித்தொட்டி இருக்கும் இடத்தை சைகையால் காட்டினான். "அப்டியே ஓடிராத, கொன்னுருவேன், இங்கயே நில்லு" என்று சொல்லிவிட்டு தண்ணித்தொட்டிக்கு போனாள்.

சுண்ணாம்பு உதிர்ந்து செங்க‌ல் தெரியும் ச‌துர‌வ‌டிவிலான‌ தொட்டியில் நான்கு குழாய் சொட்டிக்கொட்டிருந்த‌. ஒன்றை திருகி, கோவிலில் தீர்த்த‌ம் பெருவ‌துபோல் விர‌ல் ஒடுக்கி நீட்டி குழாயின் காம்பில் சேர்த்து, விழும் நீரை த‌ன் வாய்க்கு திருப்பினாள். முத‌ல் ம‌ட‌க்கு விழுங்கும் போதே ம‌ண்டைக்குள் ஏதோ க‌ச‌ங்கிய‌து. கும‌ட்டிக்கொண்டு வ‌ந்த‌து. நீர் குடித்த‌ வாய் நாற்ற‌த்தில் நிர‌ம்பி. தொட்டிக்குள்ள‌ என்ன‌மோ செத்துக்கெட‌க்கு என்று அவ‌ள் நெஞ்சு ப‌த‌றிய‌து. அவ‌ளை க‌ட‌ந்த‌ இர‌ண்டு பைய‌ன்க‌ள் கிசு கிசுத்து த‌ங்க‌ளுக்குள் பேசி சிரித்த‌ப‌டி குழாயில் கையையும், கையில் வாயையும் வைத்து த‌ண்ணீர் குடித்த‌ன‌ர். "குடிக்காத‌ப்பா, உள்ள‌ என்ன‌மோ செத்துக்கெட‌க்கு போல‌ என்றாள். அவ‌ர்க‌ள் இருவ‌ரும் நிமிர்ந்து "இப்பிடித்தேன் இருக்கும்" என்று சொல்லி விட்டு ஓடின‌ர்.

தூர‌த்தில் ப்யூன் த‌ன்னை பார்த்து கைய‌சைப்ப‌து தெரிந்து த‌த்தி ஓடுவ‌து போல் வேக‌மாக‌ ஓடினாள். "சாரு கூப்புர்றாரு" என்றான் ப்யூன். குமாரை இழுத்துக்கொண்டு ப‌ட‌ப‌ட‌ப்பாக‌ நுழைந்தாள். த‌லைம‌யாசிரிய‌ர் பெரிய‌ நீள‌மான‌ காகித‌ங்க‌ளை கொண்ட‌ கோப்பினை வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார். த‌லை நிமிர‌வில்லை. அந்த‌ அறையின் அமைதித்த‌ன்மை அவ‌ளுக்கு கொஞ்ச‌ம் நிதான‌த்தை த‌ந்த‌து. வார்த்தைக‌ளை சேக‌ரித்துக்கொண்டாள்.

"வ‌ண‌க்க‌ம் சார்" என்றாள். குர‌ல் 'சார்' முடிவ‌த‌ற்க்குள் ஓய்ந்துவிட்ட‌து குறித்து ப‌ய‌ம் க‌வ்விய‌து. நிமிந்து புருவ‌த்தை மேலேற்றி லேசாக‌ வாயை குவித்த‌ வ‌ண்ண‌ம் அவ‌ளை பார்த்தார் த‌லைமையாசிரிய‌ர். "கொஞ்ச‌ம் ஒட‌ம்பு ச‌ரி இல்லாம‌ போயிருச்சு இவ‌னுக்கு, வ‌யித்தால‌, அதான்.. என்றிழுத்தாள். அவ‌ர் நிதான‌மாக‌ "இது எத்தானாவ‌து த‌ட‌வ‌?" என்றாள். "சார், இனி இப்பிடி செய்ய‌ மாட்டயா, இந்த‌ ஒரு த‌ட‌வ‌ ம‌ன்னிச்சிருங்க‌, அவ‌ன்கிட்ட‌ நாள் முழுக்க‌ புத்தி சொல்லிருக்கு, இனி இப்பிடி செய்ய‌ மாட்டேம்மான்னு ச‌த்திய‌ம் ப‌ன்னிருக்கியான், இவுக‌ப்பாவுக்கு தெரிஞ்சா அடிச்சே கொன்னுருவாக‌, இங்க‌ சேத்த‌ப்ப‌ற‌ம்தேன் பெயிலாகாம‌ படிக்கிறியான். க‌ண்டிப்பா ந‌ல்லா வ‌ந்திருவான் சார்" என்றாள். வாய் லேசாக‌ கோணிய‌ப‌டி க‌ண்ண‌ச்ச‌தை மேலேறியிருந்த‌து.

"இவ‌னா? ஏற்க‌ன‌வே ரெண்டு வாட்டி, ஏதோ இம்புட்டுகானு ப‌ய‌, என்ன‌ செய்யிறோம்னு தெரியாம‌ செஞ்சு போட்டியான்னு ந‌ம்பி சேத்துக்கிட்டோம், அம்புட்டு பெரிய‌ சொவ‌ர‌ தாண்டி குதிச்சு போய்ருக்கியான்னா....இவ‌ன என்ன‌ சொல்ற‌து? இந்தாம்மா இவ‌ன் குதிச்சு போன‌ ம‌று நாளு ரெண்டு ப‌ய‌க‌ சொவ‌ர‌ புடிச்சு தொங்கிட்டுருந்தாங்ய‌ன்னு வார்ட‌ன் வ‌ந்து சொல்றாப்ல‌. இத்த‌ன‌ வ‌ருச‌த்தில‌ இப்பிடி ந‌ட‌ந்த‌தில்ல‌ தெரிஞ்சிக்க‌. குமார் ச‌ந்திராவின் பின்னால் த‌ன்னை முழுமையாக‌ ம‌றை‌த்துக்கொண்டான்.

நாங்க‌ என்ன‌ பாடு ப‌ட்டு பய‌க‌ள‌ ப‌டிக்க‌ வைக்கிறோம்னு தெரியுமா? இவ‌ன‌ மாதிரி ப‌ய‌க‌ தானும் கெட்டு அடுத்த‌வ‌னையும் கெடுக்குறாங்ய‌.. இவ‌ன‌ கூட்டி போயிரு, அடுத்த‌வார‌ம் நீ ம‌ட்டும் வ‌ந்து டீசிய‌ வாங்கிக்க‌. ந‌ட‌த்தையில‌ வேனும்னா குட்டுன்னு போட்டு தொலையிறேன். எங்கிட்டாவ‌து கொண்டுபோய் சேத்துக்க‌. ச‌ந்திரா வாய் இன்னும் கோண‌லாகி க‌ண்க‌ள் க‌ல‌ங்கிய‌து. குர‌லில் நீர் சொட்ட‌ "இந்த‌ ஒரு வாட்டி ம‌ட்டும் சார்" என்று விக்கினாள். அடுத்த‌ வார‌ம் சீலைய‌ம்ப‌ட்டி ப‌ய‌க‌ளையே ப‌ள்ளிகொட‌த்துல‌ சேக்க‌ கூடாதுன்னு ச‌ங்க‌ம் மீட்டிங் போட‌ப்போகுது. உங்க‌ ஊர் பிள்ளைக‌தே இங்க‌ அத்த‌ன‌ அட்டுழிய‌த்தையும் பண்ற‌து. இவ‌ன‌ கூப்டுகெள‌ம்பு, வேல‌ கெட‌க்கு என்றார்.

ச‌ந்திரா சேலையின் த‌லைப்பை பிடித்த‌ப‌டி நின்றாள். க‌ண்ணீரை துடைக்க‌வில்லை. த‌லைமையாசிரிய‌ர் குணிந்து கோப்பை பார்த்துக்கொண்டிருந்தார். சில‌ நிமிட‌ங்க‌ளில் ச‌ந்திராவின் மெல்லிய‌ அழுகுர‌லில் நிமிந்தார். "கெளம்புன்னு சொல்றேன்ல‌ம்மா, இங்க‌ நின்னு ஒப்பாரி வைக்காத‌ என்று குனிந்து கொண்டார். வெளியே போய்விடுவோம் என்று தோன்றினாலும் ச‌ந்திராவுக்கு அங்கேயே நின்றாள். த‌லைமையாசிரிய‌ர் குனிந்த‌ப‌டியே மேசையில் இருந்த‌ வ‌ட்ட‌மான வ‌ழ‌வ‌ழ‌ப்பான‌தை அழுத்த‌ அது ட்ரீங்ங்..என்ற‌து. ப்யூன் ப‌டப‌ட‌த்த‌ உட‌ல் மொழியுட‌ன் வ‌ந்தான். விசும்பிக்கொண்டிருக்கும் ச‌ந்திராவை பார்த்தான். த‌லைமை த‌லை நிமிராம‌ல் வெளியேற்றும்ப‌டி கைய‌சைத்தார்.

"வாம்மா வாம்மா" என்று ப்யூன் அவ‌ள‌ருகில் செல்ல‌ குமாரை இழுத்துக்கொண்டு ச‌ந்திரா வெளியேறினாள். வாச‌ல் வ‌ந்த‌தும் குமாரின் த‌லைமுடி ப‌ற்றி இழுத்து முக‌த்தில் க‌ட்டுப்பாடு இல்லாத‌ கைக‌ளை வீசினாள். ச‌‌ற்றும் எதிர்பாராத‌வ‌ன் ப‌ய‌ந்து "ப்யே..என்றிழுத்து க‌த‌றினான். ச‌த்த‌ம் ப‌ள்ளி வ‌ளாக‌ம் க‌ட‌ந்தது. அடிக்கும் போது கைக‌ளில் சிக்கிய‌ பைக‌ட்டை விசிறி எறிந்தாள். ப்யூன் வெளியே ஓடி வ‌ந்து "இந்தா விடும்மா விடும்மா என்று க‌த்திய‌து அவ‌ளுக்கு கேட்க‌வில்லை. குமார் பெருங்குர‌லெடுத்து க‌த்திய‌ப‌டி அவ‌ளிட‌ம் த‌ப்பித்து இல‌க்கின்றி ஓடினான். வ‌குப்பிலிருந்து வாத்தியார்க‌ள் வெளியே வ‌ந்து பார்த்த‌ன‌ர். கொஞ்ச‌ம் நின்று நிதானித்த‌ ச‌ந்திரா காதுக‌ளை கூச‌ச்செய்யும் கீச்ச்சொலியுட‌ன் அழுத‌ப‌டி அவ‌ன் பின்னே ஓடினாள்.

1 comment: